Breaking

Tuesday, 6 March 2018

இலங்கை இராணுவத்தினர் தமது சமூக ஊடகங்களில் தகவல்களை வெளியிடுவதற்கு கட்டுப்பாடு!

எந்தவொரு இராணுவத்தினரும் தமது சமூக ஊடகங்களில் தேசிய பாதுகாப்புத் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

முகப்புத்தகம், டுவிட்டர், லிங்டின் போன்ற சமூக ஊடக தளங்களை இராணுவத்தினர் பயன்படுத்துவது தொடர்பில் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள், இராணுவ விவகாரங்கள் அல்லது அரசியல் விவகாரங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவிடுதல், இணைப்புக்களை பகிர்தல் போன்ற வற்றில் சகல இராணுவத்தினரும் ஈடுபட முடியாது.
அது மாத்திரமன்றி அவர்கள் அரசியல் வாதிகளையோ அல்லது அரசாங்க அதிகாரிகளையோ அவமதிக்கும் வகையில் கருத்திடுவதற்கோ, இன முரண்பாடுகள் அல்லது மத முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் பதிவுகளை இடுவதற்கோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,
இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு அதன் பதிவுகளுக்கு கருத்துக்களை பதிவிடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் சமூக ஊடக செயற்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து,
இலங்கை இராணுவத்தின் நற்பெயரை பேணுவதற்கும், இராணுவம் தொடர்பான தகவல்கள் கசிவதைத் தடுப்பதற்கும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இந்தக் கட்டுப்பாடு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்ததுடன், புதிய கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஞாபகமூட்டும் கடிதம் இராணுவத் தளபதியால் சகல இராணுவத்தினருக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்தினர் தமது பதவி நிலைகள் அல்லது அடையாளப்படுத்தல்களை சமூக ஊடகங்களில் தெரியப்படுத்த வேண்டாம் எனக் கோரப்பட்டிருப்பதுடன், சீருடையுடன் எந்தப் புகைப் படங்களையும் வெளியிடவேண்டாம் எனக் கோரப்பட்டுள்ளது.
போர்த்தளவாடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு கண்காணிப்புக்களை மேற் கொள்ளும் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
"இந்த புதிய கட்டுப்பாடுகள் சகல இராணுவத்தினருக்குமானது. இராணுவத்தினர் சகல விடயங்களையும் வெளிப்படுத்த முடியாது. தமக்கான சில தரத்தைப் பேணவேண்டும்.
முன்னாள் இராணுவ அதிகாரிகள் நீண்ட காலத்துக்கு முன்னர் ஓய்வுபெற்றபோதும் தேர்தல் பிரசாரங்களுக்கு இராணுவ சீருடையிலிருந்த புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு தவறாகக் பயன்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றார்.