Breaking

Wednesday, 21 February 2018

சீனாவின் எழுச்சியும் தேசியத் தலைவரின் தீர்க்கதரிசனமும்!

 பூகோள அரசியல் தலைப்பு 02 :
சீனக் கொள்கைவகுப்பாளர்கள் 1990 களில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ளப்பட வேண்டிய பாடங்களின் மேல் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டனர். 2000  ஆண்டுகளில் ஏனைய போர்த்துக்கல், இஸ்பெயின், பிரான்சு, யேர்மனி, பெரிய பிருத்தானியா - மற்றும் அமெரிக்கா - போன்ற வல்லரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் ஆய்வுசெய்தனர். அவ்வாறான ஆய்வுகளில் இருந்து கற்றறிந்த பாடங்கள் ஒவ்வொன்றும் சீனாவை நிலைநிறுத்தக்கூடிய படிப்பினைகளாக அமைந்தன.
கடந்த 2012 இல் சீன அதிபர் ஹி ஜின்பிங்க் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சீன வல்லுநர்களைப் பரபரப்பாகப் பணிகளில் ஈடுபடுத்தினார். உள்நாட்டு, வெளிநாட்டுக்கான சீனாவின் கொள்கைகளில் அதிபர் ஹி பெரும் மாற்றங்களைச் செய்தார். அண்மையில் ஹி அறிமுகப்படுத்திய "ஒரு கடல்பாதையும் ஒரு தரைப்பாதையும்" (ONE BELT, ONE ROAD) மற்றும் "ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கி (AIIB) ஆகிய புதிய முன்னெடுப்புகளையும் திட்டங்களையும் சீன நோக்கர்கள் ஆராய்ந்துவருகின்றனர். சீனாவின் இந்தப் புது முன்னெடுப்புக்கள் இன்னும் நிர்மாணப் பணிக்குள் இருந்தாலும், உண்மையில் 1989 இல் இருந்து பீஜிங்கில் மிகப்பெரிய வெளிநாட்டுக் கொள்கைமாற்றம் இருந்துவருவதை இது எடுத்துக்காட்டுகிறது. இங்கே மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், 'ஹி'யினுடைய திட்டங்களுக்குப் பின்னால் உள்ள சிறந்த மூலோபாயம் என்ன என்பது? 
"ஒரு கடல்பாதையும் ஒரு தரைப்பாதையும்" என்னும் திட்டமானது வெளிப்படையாக தொலைதூரப் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தைக் குறிப்பிடுகிறது. அத்துடன், இந்தப் பிராந்தியத்தில் இணைப்பை ஏற்படுத்தி, வணிகம், உட்கட்டுமானத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 
புதிய 'பட்டுப் பாதை' எனப்படும் பொருளாதார வழிப் பாதையானது சீனாவை ஐரோப்பாவோடும் மத்திய ஆசியா ஊடாக மேற்கு ஆசியாவோடும் இணைப்பை ஏற்படுத்தும்.
அதேவேளை, 21ஆம் நூற்றாண்டின் 'கடல்வழிப் பட்டுப்பாதை' எனப்படுவதன் நோக்கமானது, சீனாவை தென்கிழக்காசிய நாடுகளோடும் ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளோடும் இணைப்பை ஏற்படுத்துவதாகும். 
எதுவானாலும், அதன் உண்மையான நோக்கமானது சீனாவின் பாதுகாப்புக் கருதியே அமைகிறது. சீனா, இத்திட்டத்தை அதன் ஆசிய அயல்நாடுகளோடு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகப் பயன்படுத்துகிறது. மேலும், கடந்த ஆண்டுகளில் தென் சீனக் கடலில் ஏற்பட்ட அதிகளவான பிரிவினைப் போக்குகளையும் சச்சரவுகளையும் இந்த முன்னெடுப்பு மூலம் சீர்செய்யும் எனக் கிழக்கு மற்றும் தென்கிழக்காசியாவில் அதன் அயல்நாடுகள் நம்புகின்றன. 
அத்துடன், மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளோடு சீனா நட்பை அதிகரிக்கப் பார்க்கிறது. அதன் காரணங்கள் இருவேறு வகைப்பட்டவை: முதலாவது, குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகிய மூலதனங்களை உச்சமாக அடைய அது விரும்புகிறது.
இரண்டாவது, மேற்குச் சீனாவில் உள்ள முஸ்லிம் சனத்தொகையுடனான சீனாவின் பிரச்சினையோடு தொடர்புபட்டது, குறிப்பாக மேற்குச் சீனாவில் தனிநாட்டுக்காகப் போராடிவரும் 'உய்குர்' (Uighur) போராளிகள் மத்திய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளோடு தொடர்புகளைக் கொண்டுள்ளன. 
இந்தத் திட்ட முன்னெடுப்பானது, மத்திய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் அரசுகளிடமிருந்து சிறந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெறுவதன் மூலம் இந்த பாதுகாப்புச் சவால்களுடன் தொடர்புபட்ட விடயங்களுக்கு உதவுமெனச் சீனா நம்புகிறது.
இந்த 'தரைவழிப் பாதையும் கடல்வழிப் பாதையும்' திட்டமானது, அமெரிக்காவின் 'ஆசிய அச்சுக்கான' (Asia pivot) சீனாவின் முதலாவது முறையான பதிலடியாகவும் அமைந்திருக்கிறது. அமெரிக்கா அதன் ஆசிய மீள்சமநிலைக் கொள்கையை அறிவித்ததிலிருந்து சீனா அதன் பாதுகாப்புக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாகவே இந்த 'ஆசிய அச்சை' கருதியது. 
பீஜிங் பல ஆண்டுகளாக அதன் கொள்கையில் இருந்தோ அல்லது நடத்தையிலிருந்தோ அதுவரை நேரடியான பதிலடி எதையும் கொடுத்திருக்கவில்லை. உண்மையில் இந்த 'தரைவழிப் பாதையும் கடல்வழிப் பாதையும்' திட்டமானது அமெரிக்காவுக்கு எதிராக சீனா முன்னெடுக்கும் அதன் சொந்த ஆசிய அச்சு (Asia pivot)  ஆகும்.
அமெரிக்காவின் மீள்சமநிலைக் கொள்கைக்கான நேரடியான மோதலை அல்லது சவாலைத் தவிர்ப்பதற்காக அதன் திட்டத்தின் உண்மையான உத்தேசத்தைச் சீனா மறைத்துவருகின்ற போக்கையே வெளிப்படுத்திவருகின்றது.
மேலும், 'தரைவழிப் பாதையும் கடல்வழிப் பாதையும்' திட்டத்தின் மூலம் சீனா தன்னிடம் உள்ள பலங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்காகவும் விரும்புகிறது. இந்த முன்னெடுப்புக்கள் மூலம் நெடுஞ்சாலைகள், அதிவேகத் தொடருந்துப் பாதைகள், குழாயிணைப்புக்கள்,துறைமுகங்கள் ஆகியவற்றைத் திட்டமிட்டுக் கட்டிவருகிறது. இவ்வாறான கட்டுமானத் துறைகளில்தான் சீனா தனது பலத்தைப் பெரிதும் கொண்டுள்ளது.
இன்னும் முடிவற்ற மனித மூலதனத்தையும் உட்கட்டுமான அபிவிருத்தி அனுபவத்தையும் வெளிப்படையாகச் சீனா கொண்டிருக்கிறது. இவை, அதன் ஆற்றலில் தனித்துவத்தை ஏற்படுத்தி, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வைப்பதோடு, அதன் பெருமளவு வளத்தை அதன் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, தனது சிறந்த திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வழிவகை ஏற்படுத்தும்.
மேலும், தனது தொழினுட்பங்களை ஏற்றுமதிசெய்து, பொருளாதாரத்தை விரிவாக்கி, தன்னைச் சூழவுள்ள பிராந்தியங்களுடன் வணிக உறவுகளை ஏற்படுத்துவதன் வாயிலாகச் சீன உற்பத்திப் பொருட்களுக்கான புதியதும் மிகப்பெரியதுமான சந்தைகளைக் கண்டுபிடிக்கலாம் எனச் சீனா நம்புகிறது. 
இந்த அபிவிருத்தியானது, சீனாவுக்கும் ஆசியப் பிராந்தியங்களுக்கும் இடையே போக்குவரத்தையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தும். அதேவேளை, அது சீனாவின் அயல் நாடுகளை, சீனச் சந்தைகளிலும் மூலதனத்திலும் தங்கியிருத்தலை அதிகரிக்க ஊக்குவிக்கலாம்.
மொத்தத்தில், ஆசியாவுக்கான அமெரிக்க அச்சை அதிகளவு வெற்றிகரமாகச் சமநிலைப்படுத்த இந்தத் திட்டம் சீனாவுக்கு வரப்பிரசாதமாக அமைவதோடு, அந்தப் பிராந்தியத்தில் ஒரு தலைமைத்துவப் பாத்திரத்தை எடுப்பதற்கும் சீனாவுக்கு உதவுகிறது.
சீனா திட்டமிட்டிருக்கும் இந்தப் புதிய முன்னெடுப்புகளில் வெற்றியை முற்கூட்டியே எதிர்வுகூறுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அதுவானது சீனாவின் அயல் நாடுகள் இத்திட்டத்துக்கு எவ்வாறு பதிலளிக்கப்போகின்றன என்பதில்தான் அதிகம் தங்கியிருக்கும். 
பீஜிங் அதைத் தெளிவுபடுத்துவதற்கு இன்னும் அதிகளவில் பெருந் தடைகள் காணப்படுகின்றன. சீனாவின் அயல் நாடுகள் தமது கடற்கரைப் பகுதிகளுக்கு மூலதனங்களும் பணமும் வந்து குவிவதை வரவேற்கலாம், ஆனால் மிகப்பெரிய செல்வாக்கையோ அல்லது நெருங்கிய அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளையோ சீனாவுக்கு கைமாறுவதை அவை விரும்புவதில்லை. 
அண்மை ஆண்டுகளில் பல அயல் நாடுகளில் எழுச்சிபெற்றுவரும் ஒரு சீன எதிர்ப்புணர்வை பார்க்கிறோம். ஏற்கெனவே, பிராந்திய நாடுகளில் உள்ள மக்களுக்கு தமது தாயகத்தில் பெருந்தொகையான சீனர்களின் பிரசன்னத்தால் ஒரு சோர்வும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது. சீனாவினுடை புதிய முதலீடு ஆனது, பாரிய சீனர்களின் ஒரு பிரசன்னத்துடனே கொண்டுவருமென்பது திட்டவட்டமானது, அதேவேளை இதுகூடப் புதிய பதற்றத்தைத் தோற்றுவிக்கலாம். 
இது, சிறிலங்காவில் - கடந்த யனவரி 2015 நடந்த யனாதிபதித் தேர்தலின்போது - சீன ஆதரவு மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது, புதிய அதிபர் மைத்திரபால சிறிசேன, 'ஒரு புதிய சீனக் காலனி ஆதிக்கத்துக்குள் சிறிலங்காவை மகிந்த சிக்கவைத்திருப்பதாக' மகிந்த ராஜபக்ச மேல் குற்றஞ் சுமத்தியிருந்தமை காணக்கூடியதாக இருந்தது. அதேவேளை, தற்போது (10 பெப்ரவரி 2018) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்த நல்லாட்சி எனப்படும் கூட்டு ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக அமெரிக்க மற்றும் இந்திய இராசதந்திரிகள் முனைப்புக் காட்டிவருவதை நன்றாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 
இவற்றுள் பல நாடுகள், அபிவிருத்தி விடயங்களில் சீனாவோடு கூட்டிணைந்து செயற்படும் அதேவேளை, பாதுகாப்பு விடயங்களில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படவே இன்னும் விரும்புகின்றன.
சர்வதேச உறவுகளில் இது இவ்வாறு இருக்கையில், பணத்தால் விசுவாசத்தை வாங்கமுடியாது. செல்வாக்கு என்பது ஒரு நாட்டின் பணப்பெட்டியில் இருந்து வருவதில்லை, மாறாக பகிரப்பட்ட அதன் பெறுமதியின் உயர்விலும் மென்போக்கான அதிகாரத்திலும் இருந்தே அது கிடைக்கிறது. 
சீனா, அதன் மூலோபாய இலக்குகளை நிறைவேற்ற முடிவதானது, தமது இலக்கு நோக்கிய தெளிவான பார்வையை அதன் அயல் நாடுகளோடு பகிர்ந்துகொண்டு, அந்நாடுகள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கக் கூடிய சீனாவின் ஆற்றலிலும் அதிபர் ஹியினுடைய முன்னெடுப்புக்களிலும் கொள்கைகளிலுமே பெரிதும் தங்கியிருக்கும். 
ஆசியாவோடு ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதானது தொடர்வண்டிப் பாதைகள், நெடுஞ்சாலைகள், குழாயிணைப்புக்கள் போன்றவற்றை அமைத்துக் கொடுப்பதில் மட்டும் பயனளிக்காது, மாறாக ஆசிய நாடுகளோடு பொதுவான அடையாளத்தையும் பெறுமதியையும் கட்டியெழுப்ப முடியுமா என்பதிலும் தங்கியிருக்கும். 
சீனா சமச்சீரற்ற போரியலில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, மின்காந்தவியல் துடிப்பு படைக்கலன்கள், 'சைபர்' மற்றும் விண்வெளிப் போர்முறை மற்றும் சிறுரக ஆனால் போதியளவு அணுவாயுதத் தடுப்பு ஆயுதங்களில் கவனம்செலுத்தி வருகிறது. 
அதேவேளை, சீனாவுக்கு மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் வழங்கக்கூடிய சிறிலங்கா, சிம்பாவே, ரசியா போன்ற  குறிப்பிடத்தக்க பிரச்சினைக்குரிய பங்காளி நாடுகளோடு 'சங்காய் கூட்டுத்தாபன அமைப்பு, சுதந்திர வணிக உடன்பாடுகள்' போன்ற சீனாவை மையப்படுத்திய இருதரப்பு மற்றும் பல்தரப்பு உடன்பாடுகள் கொண்ட ஒரு வலையமைப்பையும் சீனா உருவாக்கிவருகிறது.
சீனாவின் எழுச்சியானது இன்று அமெரிக்கா முகங்கொடுக்கின்ற மிகவும் பாரதூரமான பூகோள அரசியற் சவாலை உருவாக்கியுள்ளது. அண்மைய போக்குகளோடு ஒப்பிடுகையில், சீனா இந்தத் தசாப்தத்தின் முடிவுக்குள் அமெரிக்காவைக் காட்டிலும் தேசியப் பொருளாதாரத்தில் அதிகளவு வளர்ச்சியடையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். 
ஆண்டு 1980 களில் இருந்து உருவான அதன் பொருளாதார மறுமலர்ச்சியானது மிகப்பெரிய சர்வதேசப் பாத்திரத்தை வகிக்கக்கூடியளவுக்குத் தற்போது சீனா வளர்ச்சிடைந்துள்ளது. இந்த மாற்றம், சில முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சாதாரணமாகக் கற்பனைபண்ணிக்கூடப் பார்க்கமுடியாதளவுக்கு இருந்தது. 
அதன் அசாதாரணமான படைத்துறை நவீனமாக்கற் திட்டம் மூலம், மேற்குப் பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் முன்னோக்கிய படைநகர்த்தல்களையும் முன்னோக்கிய நடவடிக்கைப் படைகளையும் நெருக்கடிக்குள் நிறுத்தும் அளவுக்குப் பீஜிங்க் மிகப்பெரிய வளர்ச்சிகளை அடைந்துள்ளது. 
அதன்விளைவாக, அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்புநாடுகளுக்கான அதன் பாதுகாப்பு உத்தரவாதங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செலவு மிகவும் அதிகரித்துள்ளது. 
அதன் தனித்துவமான சிறப்பியல்புகளாக ஒரு கண்டத்தின் அளவிலான வலு, பிரமாண்டமான தொழினுட்பரீதியாக வளர்ச்சியடைந்துவரும் பொருளாதாரம், மூலோபாயரீதியாக ஒரு சாதகமான அமைவிடம், வேகமாகப் பெறக்கூடிய வலிமைமிக்க படைத்துறை ஆற்றல்கள் போன்றவற்றை சீனா கொண்டிருக்கிறது. 
இவை அமெரிக்காவின் முன்னைய போட்டியாளர்களிடமிருந்து பண்பு, இலக்கு மற்றும் குறிக்கோள்களில் வேறுபட்டிருந்தாலும், அமெரிக்காவுக்கான மிக முக்கிய எதிர்ப் போட்டியாளராக சீனா விரைவாகவே மாறிவிட்டது.
இந்நிலையில், இறுதிப் போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்காக சீனாவின் அசுர பலத்தைப் பெற்றதற்குப் பிரதிபலனாக  சீனாவோடு போட்ட ஒப்பந்தங்களைச் சிறிலங்கா அரசு மீறமுடியாமல் திக்கு முக்காடுவதைப் பார்க்கமுடிகிறது. 
சீனாவிடமிருந்து பெற்ற கடன்களை அடைக்க முடியாமல் 99 ஆண்டுகள் குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சிறிலங்கா விற்றுவிட்டதால், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப்பெரிய பூகோளப் போட்டியை சிறலங்கா தொடக்கிவிட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகத்தை அமைத்து, தனது கடல்வழிப் பட்டுப் பாதையை சிறிலங்காவோடு இணைக்கவுள்ளது. அது இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய முத்தரப்புக்கள் இடையே பெரும் பூகோளச் சிக்கலைத் தோற்றுவித்தள்ளது.
இந்தச் சிக்கல் நாளடைவில் விரிசலாக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. அது, சிறிலங்காவில் முன்னெடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் சீனச் சார்பு, அமெரிக்கச் சார்பு என்ற நிலை உருவாகிவருகிறது. கடந்த யனாதிபதித் தேர்தலிலும் தற்போது நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் சிறப்பாக வெளிப்பட்டு நிற்கிறது. 
ஆசியாவில் மையங்கொண்டிருக்கும் இந்த இரு துருவ வல்லாதிக்க நாடுகளின் போட்டி உச்சத்தைத் தொடுகின்ற கட்டத்தில், இலங்கைத் தீவு இரு நாடுகளாகப் பிரிவதற்கான சூழல் தானகவே ஏற்படும்.
அப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தீர்க்கதரிசனம் உலகிற்கு வெளிப்படும்.

அதுவரை, தமிழீழம் என்ற கோரிக்கையில் அணு அளவும் விட்டுக்கொடுக்காது, எமக்குக் கிடைக்கின்ற வழிகளில் நாம் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.