Breaking

Saturday, 17 February 2018

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் பூந்தேரில் வலம்!

மாசிப் பெருவிழாவை முன்னிட்டு பூந்தேரில் வலம் வந்த கோட்டை மாரியம்மன் பூச்சொரிதலுக்காக பக்தர்கள் சார்பில் பூக்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருவிழா பூத்தமலர் பூ அலங்காரத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான பூச்சொரிதலுக்காக அம்மன் பூந்தேரில் வலம் வரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலை 11 மணிக்கு அம்மன் எழுந்தருளிய பூந்தேர் சிறப்புப் பூஜைகளுக்கு பின் கோயிலிலிருந்து வீதி உலா புறப்பட்டது. 
பால்குடம் எடுத்து வந்த பக்தர்களைத் தொடர்ந்து, விநாயகர், முருகன், ஐயப்பன், மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் ரதங்கள் சென்றன. அதன் பின் கோட்டை மாரியம்மனின் பூந்தேர் மேற்குரத வீதி வழியாக வலம் வந்தது. கலைக்கோட்டு விநாயகர் கோயில், பென்சனர் தெரு, கோபாலசமுத்திர குளம் தெரு, கிழக்கு ரதவீதி, தெற்குரத வீதி வழியாக சென்ற பூந்தோர், மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் கோயிலை அடைந்தது.
நான்கு ரத வீதிகளிலும் பூ காணிக்கை மண்டபங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பக்தர்கள் சார்பில் வழிநெடுகிலும் அம்மனுக்கு உதிரிப்பூக்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. அந்த பூக்கள், லாரிகள் மூலம் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மாரியம்மன் சந்நிதி முழுவதும் நிரப்பப்பட்டு, தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
பூந்தேரில் எழுந்தருளி வலம் வந்த அம்மனை தரிசிப்பதற்காக, திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பூந்தேர் வலம் வரும் பாதையில் நீர், மோர் இலவசமாக வழங்கப்பட்டது.