Breaking

Saturday, 17 February 2018

மகிந்தவிற்கான வாக்களிப்பு எமக்கு கிடைத்த எச்சரிக்கை – அர்ஜுன ரணதுங்க

மகிந்தவிற்குக் கிடைத்த வாக்குகள் எமக்கு கிடைத்த வெறும் எச்சரிக்கையே, ஆனால் அரசாங்கம் மக்களின் குறைபாடுகளை எதிர்காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இன்று (சனிக்கிழமை) யாழிற்கு விஜயம் செய்திருந்த அவர், வடமாகாண பெற்றோலியக் கூட்டுத்தாபன முகவர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘நடைபெற்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலோ அல்லது ஜனாதிபதித் தேர்தலோ அல்ல. இதில் தடுமாறுவதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமில்லை. ஆனால் மொட்டுக்கு வாக்களித்தவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
கொலை கொள்ளை மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கியிருந்தால், இந்த நிலமை வந்திருக்காது. இது சம்பந்தமாக அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். இவை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமருமே பார்க்க வேண்டும். இந்தத் தேர்தல் வெறுமனே எமக்கு கிடைத்த எச்சரிக்கையாகவே கருதலாம்.
எதிர்வரும் காலங்களில், ஜனாபதியோ, பிரதமரோ கட்சியைப் பார்த்து செயற்படாமல், மக்களை பார்த்து செயற்பட வேண்டும்.
தேவையற்றவர்களுடன், தேவையற்ற தொடர்புகளை வைத்து நாட்டினை கவிழ்க்கலாம் என நினைப்பவர்களுக்கும், தவறான வழியில் நாட்டினைத் திசை திருப்ப நினைப்பவர்களுக்கும் அடுத்த தேர்தலில் நல்ல பாடம் கற்பிக்கப்படும். நாட்டு மக்களுக்கு விரோதமாக செயற்படுவர்களுக்கு சரியான முறையில் தண்டனை வழங்கப்படவேண்டும்’ என்று கூறினார்.