Breaking

Saturday, 17 February 2018

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்!

தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க
வேண்டும்’’ என்று தமிழக விவசாயிகள் சங்க தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காவிரி நதிநீர்  பங்கீடு பிரச்னையில் உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு குறித்து, காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று 1983ம்  ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த  காவிரி டெல்டா பாசன விவசாயிகள்  சங்க தலைவர் காவிரி ரெங்கநாதன் கூறியதாவது: தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தர வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, இக்கால கட்டத்தில்  நியாயமானது.
தற்போது, உச்சநீதிமன்றம்  கூறியுள்ளதுபோல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, நீர் அளவை கணக்கிட்டு, தேவையான  மாதங்களில் போதிய நீரை தமிழகத்திற்கு அளிக்கும் உத்தரவாதத்தை மத்திய அரசு  தர வேண்டும்.
 இந்த தீர்ப்பை கர்நாடக மாநில அரசு முறையாக பின்பற்றினால்  மக்களிடையே எவ்வித காழ்ப்புணர்ச்சியும், வேறுபாடும் ஏற்படாது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு: காவிரியை  யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது, மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதே நமக்கு வெற்றிதான்.
14.75 டிஎம்சி தண்ணீர்  குறைக்கப்பட்டாலும் மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்தால் நமக்கு இப்போது  கிடைப்பதைவிட கூடுதலாக தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்புகிறேன்.  மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்காவிட்டால் டெல்லியில் மீண்டும் போராடுவேன். தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்: தமிழகத்துக்கு  தண்ணீரை குறைத்தது ஏமாற்றம் அளிக்கிறது. அதே நேரத்தில் நதிகள் யாருக்கும்  சொந்தமில்லை என தீர்ப்பளித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.  இதை பயன்படுத்தி நதிகளை இணைத்து தேசியமயமாக்க வேண்டும்.
தமாகா விவசாய அணி மாநில தலைவர் புலியூர்  நாகராஜன்: தமிழக அரசு சட்ட போராட்டத்தில் கோட்டை விட்டது. காவிரி  மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும். தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் நல சங்க  மாநிலத் தலைவர் விஸ்வநாதன்: தமிழகத்துக்கு 14.75 டிஎம்சி குறைத்து கர்நாடகாவுக்கு அதிகமாக  வழங்கியிருப்பது காவிரி நீர் விஷயத்தில் கழுதை தேய்ந்து  கட்டெறும்பாகியுள்ளது. இது தமிழகத்துக்கு அநீதியாகும்.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச்  சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம்: 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டாலும்  தீர்ப்பு வரவேற்கத்தக்கது. காவிரி அனைவருக்கும் பொதுவானது. யாரும் உரிமை  கொள்ளமுடியாது என்ற தீர்ப்பு சரியானது.
காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலசங்க துணை செயலாளர் கவுண்டம்பட்டி சுப்பிரமணியன்: இந்த தீர்ப்பு வருத்தம் அளிக்கிறது. அதேசமயம் காவிரி யாருக்கும் சொந்தம் இல்லை, மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும என கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. மேலாண்மைவாரியத்தில் தொழில்நுட்ப வல்லுனர்களை  அதிகாரிகளாக நியமித்து குழு அமைக்கவேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் கக்கரை சுகுமாரன்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன்: இந்த தீர்ப்பையாவது கர்நாடகா அரசு அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு விரைந்து அமைக்க வேண்டும்.