Breaking

Sunday, 18 February 2018

சம்மந்தரின் அவசர கோரிக்கை!

கொழும்பு கூட்டாட்சி அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, தேசிய பிரச்சினை தீர்வு தொடர்பில் மக்கள் வழங்கிய ஆணையை எவ்வகையிலும் பாதித்துவிடக் கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் தனித்தனியாகச்
சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அறிவுறுத்தியுள்ளார்.தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு சந்தித்த சம்பந்தன், அவருடன் நீண்ட நேரம் முக்கியமான விடயங்கள் குறித்து மனம் விட்டுப் பேசினார் எனத் தெரிகிறது.
2015 ஜனவரி 8ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை மீறி புதிய ஆட்சியொன்று இப்போது உருவாகி விடக் கூடாதென ஜனாதிபதியை எச்சரித்த சம்பந்தன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளை வைத்து  ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட ஆணையை மீறிவிடக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பின்னர் பிரதமர் ரணிலைச் சந்தித்த சம்பந்தன், இரு தலைவர்களும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இரண்டு தலைவர்களையும் சம்பந்தன் தனித்தனியே சந்தித்துப் பேசினார் எனத் தெரியவந்தது .
இந்தச் சந்திப்புகள் தொடர்பில் இரா.சம்பந்தன் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும்போது தெரிவித்ததாவது:-
‘2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் எவரும் செயற்படக் கூடாது என நான் வலியுறுத்தினேன். முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் தீர வழங்கப்பட்ட அந்த மக்கள் ஆணையை மீறி ஒரு புதிய ஆட்சி உருவாக்கம் இடம்பெற்றுவிடக் கூடாதென நான் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினேன்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையைப் புறந்தள்ளிவிட முடியாது என்பதை நான் சொன்னேன். ஜனாதிபதி எனது நிலைப்பாட்டை – கருத்துக்களை விளங்கிக் கொண்டார். இந்தச் சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. பிரதமரிடமும் இவற்றையே சொன்னேன்’  என்று கூறியுள்ளார்.