Breaking

Wednesday, 14 February 2018

தேர்தல் சுட்டும் செய்தி என்ன..?

(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்
பார்க்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. தமிழ்மக்களை நித்திரைப் பாயிலிருந்து மறுபடியும் சிங்கள மக்கள் தட்டி எழுப்பிவிட்ட நிகழ்வாகவே இந்தத் தேர்தல் முடிவு சுட்டி நிற்கிறது! தென்னிலங்கைச் சிங்கள சமூகம் மகிந்த இராசபக்சவை அறுதிப் பெரும்பான்மையாக வெல்லவைத்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான பல செய்திகளைக் கூறியுள்ளனர். 1) தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் வழங்கப்படக் கூடாது. 2) சிறிலங்காப் படைகளின் போர்க் குற்றங்களைத் தண்டிக்கக் கூடாது. 3) தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகளை நிறுவி, இனவாதப் பௌத்த மதத்தைப் பரப்புவது. இதுபோன்ற கொள்கைகளுக்குத் தான் அவர்கள் அறுதிப் பெரும்பான்மையை வழங்கியிருக்கிறார்கள். ஏனெனில், தமிழர் தரப்பு (சம்பந்தன், சுமந்திரன் தலைமை) என்றுமில்லாத கீழிறங்கல் செயல்களைச் செய்தும், சிங்கள மக்களுக்குக் கூசாத வகையில் வேண்டிய விட்டுக் கொடுப்புக்களைச் செய்தும் இந்த சிங்கள சமுதாயத்தின் மனநிலை என்பது தமிழர்களுடைய உரிமைகளுக்கு எதிராக இருப்பதாகவே இந்த உள்ளூராட்சித் தேர்தலைப் பதிவுசெய்ய முடிகிறது. நன்றி. - த.ஞா.கதிர்ச்செல்வன்.
அதுவானது, இந்த நல்லாட்சி எனப்படுவதன் ஊடாகத் தமிழர்களுக்கு குறைந்தபட்சத் தீர்வும் வழங்கப்படக் கூடாது என்பதற்கான ஆணையை சிங்கள சமூகம் வழங்கியிருப்பதாகவே கொள்வேண்டி உள்ளது. தமிழர்களை இனவழிப்புச் செய்வதைப் பெரிதும் ரசித்து, இறுதிப் போரில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப் படுவதைத் தடுக்காது, அதனைத் தமது வெற்றிவிழாவாகக் கொண்டாடி வருகின்ற இந்த சிங்கள சமூகம், இவற்றை இன்னும் தொடரவேண்டும் என்பதற்காகவே மகிந்த ராசபக்சவை அறுதிப் பெரும்பான்மை வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்! மகிந்த இராசபக்சவின் இந்த வெற்றி, உள்ளூராட்சித் தேர்தலுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. அது, இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழர்களை முற்றாக ஒடுக்கும் வரை தொடரப் போகின்றது என்பதை சிங்கள சமூகத்தின் மனநிலையை வைத்துக் கட்டியம் கூறமுடியும். இவற்றை எல்லாம் விட, வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதியில் நடைபெற்றுவரும் இனஅழிப்பைக் கூட இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. கிழக்கு ஏற்கெனவே சுக்குநூறாகத் துண்டாடப் பட்டுள்ள அதேவேளை, வடக்கையும் அவ்வாறு துண்டாடுவதற்கு முனைப்புக் காட்டியிருப்பதை இந்தத் தேர்தல் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் கையறு நிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைமை தாங்கியிருக்கும் ஒரு சில குருமூர்த்திகளே பொறுப்பேற்க வேண்டும்! தமிழ்மக்கள் ஒரு மென் தீவிர இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுவதை அனுமதித்துவரும் இந்தக் கூட்டமைப்பின் தலைவர்கள் கட்டாயம் பதவி விலகவேண்டும். தமிழ் மக்களின் தேசிய நலனைப் பாதுகாக்க வேண்டுமெனில் இவர்கள் பதவி விலகவேண்டும் எனப் பாரிய மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை ஒன்றுபட்ட தேசிய விடுதலையின் பால் அணைத்து நிற்கக் கூடிய ஒரு தலைமையை தமிழர்கள் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. மாறாக, தேர்தல் அரசியலுக்காகத் தமிழர் தரப்புப் பல கட்சிகளை உருவாக்குவது என்பது விடுதலைப் போராட்டத்துக்குப் புதைகுழி வெட்டுவதாகவே அமையும். அதன் மூலம் தேசியக் கட்சிகளை தமிழர் தாயகப் பகுதிகளில் வேரூன்ற வைத்து, எமது மக்களை வாக்குக்கு விலைபோன அடிமை மந்தைகளாகப் பார்ப்பதில் தான் முடியும்!! எனவே, வட-கிழக்குத் தாயக பூமியில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளையும் அரவணைத்து, தமிழ்த் தேசியத்தைக் கட்டிக்காக்கக் கூடிய வகையில் முதலமைச்சர் திரு.விக்கினேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தலைமை தாங்குமாறு அழைப்பு விடுக்க வேண்டும். கூட்டமைப்பு இதற்கு சம்மதிக்காத விடத்து, பாரிய மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பதோடு, தமிழ் மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்பூட்டல் கருத்தரங்குகளை முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் மென் தீவிர இனஅழிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, பன்னாட்டுச் சமூகங்களின் ஆதரவை தமிழர் தரப்பு திரட்டவேண்டும். தேர்தல் அரசியலை தமிழர்கள் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும்? இலங்கைத் தீவில் தேர்தல் அரசியல் மூலம் சிங்களத் தரப்பிடமிருந்து எமது மக்களின் உரிமைகளை எந்தவகையிலும் மீட்டெடுக்க முடியாது. தேர்தல் வாக்கு உரிமையைப் பறிக்கும் நோக்கில் தமிழர் தாயகப் பிரதேசங்கள் எங்கும் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருவதால், வட-கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையை இழந்துவருகின்ற சூழல் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது. தேர்தல் என்று வரும்போது தமிழர்கள் - சிங்கள சமூகத்தைப் போல் - ஒன்றுபட்டு நிற்பதில் மட்டுமே தமிழர்களுடைய பலத்தை நிறுவமுடியும். இந்தப் பலத்தின் மூலம் தமிழர் தரப்பு பலமான பேரம்பேசும் சக்தியை நிறுவி, அதன் மூலம் பன்னாடுகளின் ஆதரவைத் திரட்டி, தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கத் தொடர்ந்து போராட வேண்டும். அத்துடன், இந்தத் தேர்தல் வெற்றிகளின் மூலம் நிர்வாக அலகுகளை வென்று, அதன் மூலம் அனைத்துத் தமிழ்த் தரப்பினரும் ஒன்றுபட்டு வடக்கு கிழக்குத் தாயக மக்களை வறுமையின் கோரப் பிடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். அதேவேளை, எமது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து தருவதில் அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளும் போட்டிபோட்டு உழைக்க வேண்டும். பல பொருளாதாரத் திட்டங்களை - சிறிலங்கா நிர்வாக அலகுகள் ஊடாகவும், அரச மற்றும் அரசசார்பற்ற பன்னாட்டு உதவிகள் ஊடாகவும் - முன்னெடுப்பதன் வாயிலாக எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். அதேவேளை, எமது மக்களின் முன்னேற்றத்துக்கும் வித்திடலாம். இவற்றைச் சரியாகச் செய்யத் தவறினால், மக்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து ஒருங்கக் கூடிய மிக ஆபத்தான சூழலை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்! இவற்றுக்கு அப்பால், தேர்தல் மூலம் சிங்கள இனஅழிப்பு அரசிடமிருந்து எந்த உரிமையையும் பெற முடியாது. இந்த சின்னத் தேர்தல் விடயத்தில் கூட தமிழ் மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது என்பதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டுத் தேவையா?! கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலான தமிழரின் உரிமைப் போராட்டங்கள் எமக்குக் கற்பித்த பாடங்கள், முள்ளிவாய்க்காலில் வைத்து தமிழர்கள் எந்த யுகத்திலும் மறக்காதவாறு அறுதியும் இறுதியுமான தீர்ப்பைக் கூறிநிற்கிறது. அது என்னவென்றால், இனஅழிப்புச் சிங்கள தேசத்திடம் பேசி எந்த உரிமையையும் பெற முடியாது. அது அகிம்சை வழியிலோ அல்லது ஆயுத வழியிலோ எந்தவழியிலும் சிங்கள தேசத்திடம் இருந்து ஒரு நல்ல தீர்வைப் பெறமுடியாது என்பதே. அதனால் தான், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பும், முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட இறுதித் தீர்ப்பும் எம்மைப் பன்னாட்டுச் சமூகத்திடம் நீதிவேண்டிப் போராடுவதற்கான தளத்தை உருவாக்கித் தந்துள்ளது. இந்தத் தளத்தில் நாம் மிக வலிமையாக நின்று போராட்டங்களை முன்னெடுப்பதால் மட்டுமே நாம் எமது விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியைப் பேணி, எமத உரிமைகளைப் பெற்றெடுக்க முடியும். இப்படி எவ்வளவு காலத்துக்குத் தான் மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது என்ற கேள்வி உண்டுதான்! அதற்கான வழி, இந்த மக்கள் போராட்டங்களை இன்னொரு படிக்கு உயர்த்தி, மக்களால் பன்னாடு சார்ந்த தமிழ்ப் பேராளர்களைத் தேர்வுசெய்து, அவர்கள் மூலம் இராசதந்திர அணுகுமுறைகளை முன்னெடுக்கக் கூடிய பொறிமுறையை உருவாக்க வேண்டும். இதன் வாயிலாகத் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களின் நியாயங்களைப் பன்னாட்டுச் சமூகங்களுக்கு எடுத்துரைத்து, பல நாடுகளின் ஆதரவைத் திரட்டி எமது போராட்டத்தை வென்றெடுக்க முடியும். இவற்றைச் செய்யாது சிங்களத்தோடு பேசிக் காலத்தை வீணாக்குவது, தமிழ் இனத்தை அழிவுப் பாதைக்குள் தள்ளுவதாகவே முடியும்!