Breaking

Thursday, 8 February 2018

தமிழர்களின் எதிர்கால இருப்பை கருத்திற்கொண்டு மாற்றத்திற்காக வாக்களியுங்கள்!

தமிழ்தேசிய கூட்டமைப்பு சிங்கள கட்சிகளோடு சேர்ந்து தமிழர் தாயகத்தை அழிக்கும் நடவடிக்கையில் வெளிப்படையாக இறங்கியுள்ள நிலையில், தமிழர்களின் எதிர்கால இருப்பை
கருத்திற்கொண்டு மாற்றத்திற்காக வாக்களிக்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் சின்னத்தில் போட்டயிடுகின்ற தமிழ்த்தேசிய பேரவையின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்றைய தினம் (06) நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் தமிழ்த்தேசியம் மிக முக்கியம் வாய்ந்த காரணமாக உள்ளது. கூட்டமைப்பும் இலங்கை அரசும் புதிய அரசிலமைப்பை இணைந்து தயாரித்து கொண்டு வருவதாகவும், இதற்கான ஒரு கருத்து கணிப்பாகவும் இந்த தேர்தலை நடாத்த தீர்மானித்துள்ளனர்.

தமிழ் மக்கள் காலம் காலமாக நிராகரித்து வந்த ஒற்றையாட்சிக்கான ஒரு ஆணையை பெறுகின்ற முன்னேற்பாடான தேர்தலாக இது பார்க்கப்படுகின்றது. இதற்கு ஆணை வழங்குமாறு கூட்டமைப்பு பிரச்சாரமும் செய்து வருகின்றது. கடந்த 70 வருடங்களாக 3 அரசியலமைப்பு இந்த நாட்டில் நடைமுறையில் இருந்தது.

பிரித்தானியர்களிடமிருந்து நாடு விடுதலை பெற்ற போது 50:50 இற்கு என்ற கோரிக்கை முன்வைத்து சோல்பரி ஒற்றையாட்சி கொண்டுவரப்பட்ட போது அதனை நிராகரித்து எமது தலைவர்கள் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்கள். பின்னர் வந்த 2 ஒற்றையாட்சி அரசிலமைப்பையும் மக்கள் தொடர்ந்தும் நிராகரித்தார்கள்.

அதிகாரம் மிக்க சமஸ்டி ஆட்சியின் மூலமே தமிழர் தேசம் பாதுகாக்கப்படும் என்பதால் தான் எமது முன்னைய தமிழ் தலைவர்கள் ஒற்றையாட்சியை புறக்கணித்து வந்தார்கள். அந்த நிலையில் தான் தற்போது வரவுள்ள புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியா? சமஷ்டியா? என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி என்பது தெளிவாக உள்ளது. அதனால் தான் மக்களை ஏமாற்ற சிங்களத்தில் ஏக்கிய இராட்சிய என்றும் தமிழில் ஒருமித்த நாடும் என்ற வார்த்தை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களை ஏமாற்றும் சொற்பிரயோகம் தான் இது. ஒருமித்த நாடு என்பதன் அர்த்தம் இந்த நாடு முழுவதும் ஒரேமாதிரியாக தான் இருக்க வேண்டும் என்பது தான் அர்த்தம்.

இதுதான் ஒற்றையாட்சி, இதற்கு தான் கூட்டமைப்பினர் ஆதரவு கோரி வந்துள்ளார்கள்.இதற்கு நாங்கள் வாக்களிக்க போகின்றோமா? ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திர கட்சி, பொது ஜன பெரமுன, ஜே.வி.பி, ஈ.பி.டி.பி.யும் இந்த ஒற்றையாட்சியை ஆதரிக்கின்றது.

ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் தமிழின விரோதிகள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற தரப்பும் மக்களை ஏமாற்றும் வகையில் சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருகின்றனர். ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் நாங்களும் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்திருக்கலாம்.

ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை, இலட்சக்கணக்கான மக்களுடைய உயிர் தியாகங்கள் வீண் போய்விட கூடாது என்பதற்காக நாங்கள் தொடர்ச்சியாக எமது மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றோம். எதிர்வரும் 10 ஆம் திகதி முக்கிய நாள், அந்த நாளில் அழிக்கப்படும் வாக்குகள் தவறானவர்களிக்கு சென்றால் எமது தேசத்திற்கு எதிர்காலம் இருக்க போவதில்லை.

எங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க போகின்ற மாற்றத்திற்கு வாக்களியுங்கள். அந்த மாற்றம் சைக்கிள் சின்னத்தில் போட்டயிடுகின்ற தமிழ்த்தேசிய பேரவையின் மாற்றமாக இருக்கட்டும் என்றார்.