Breaking

Thursday, 18 January 2018

2-வது டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா வெற்றி

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில்
தென்ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இந்த இரண்டு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் சூப்பர் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்க அணி 335 ரன்னும், இந்திய அணி 307 ரன்னும் எடுத்தன.

28 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 258 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்கா அணியின் 2-வது இன்னிங்சில் டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 80 ரன்னும், எல்கர் 61 ரன்னும் எடுத்தனர். முகமது ‌ஷமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. எம்.விஜய் 9 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 4 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து திணறியது.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 252 ரன் தேவை. கைவசம் 7 விக்கெட் உள்ளது.

5 -ஆம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் புஜாரா 17 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். பார்த்தீவ் படேல் 19 ரன்களில் வெளியேறினார். தோல்வியை தவிர்க்க போராடிய ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 50.2 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வென்றது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக நிகிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்க அணியின் இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இழந்தது.

இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.