Breaking

Sunday, 26 November 2017

மனித குல வரலாற்றில் அதிகம் பேசாத ஒரே புரட்சியாளர் - விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன்தான்!

(கி.பரனி) இதுவரை கால மனித குல வரலாற்றில் அதிகம் பேசாத ஒரே புரட்சியாளர் - விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன்தான். ஏனைய தலைவர்களிடமிருந்து பிரபாகரன் வேறுபடும் முக்கிய பண்பு இது.

ஏனைய புரட்சியாளர்களின் போராட்ட வாழ்விலிருந்து நாம் நிறையக் கற்றுக் கொண்ட போதும் ஒரு கட்டத்தில் அவர்களது நிறைந்த பேச்சும் - உரையும் - எழுத்தும் அவர்களை அந்தப் பரப்புக்குள்ளேயே சுருக்கிக் கொண்டது மட்டுமல்ல அவர்கள் தொடர்பான நமது தேடலையும் - சிந்தனையையும் அதற்குள்ளேயே முடித்தும் கொண்டது. இந்த இடத்தில்தான் பிரபாகரனின் 'மவுனம்' அதியுச்ச பரிமாணத்தை எட்டுகிறது. இயல்பான அவரது இந்த பண்பை நந்திக்கடல் வரை சென்றும் அவர் இழக்கவில்லை. இதனூடாக பிரபாகரனை வரலாற்றில் நிறுத்தியிருப்பதே இந்த மவுனம் தான். தொடர் தேடலாய், எல்லைகளற்று, முடிவிலியாய் விரியும் இந்த நூற்றாண்டின் அதி நவீன விடுதலைக் கோட்பாடான ' பிரபாகரனியத்தின்' மைய சரடே இந்த மவுனம் தான். ஏனைய புரட்சியாளர்கள் தங்களை தாங்களே எழுதினார்கள். மக்களுக்கும் போதித்தார்கள். அதை சிந்தனையாளர்கள் விரிவாக்கம் செய்தார்கள். வரலாற்றில் முதல் தடவையாக ஒரு புரட்சியாளனின் மவுனத்தை உடைத்து கோட்பாட்டுருவாக்கம் செய்யும் பணியை வரலாறு விட்டுச் சென்றிருக்கிறது. அதை "நந்திக்கடல்' தொடக்கி வைத்ததனூடாக அந்த வரலாற்று பெருமையை தனதாக்கிக் கொண்டுள்ளது. ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான ஒரு அதி மனிதனை ‘நந்திக்கடல்’ ஒரு கோட்பாட்டாளனாக மறு அறிமுகம் செய்த கதை இதுதான்.